2026 ஜூன் 2 அன்று குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகி உச்சம் பெறுகிறார். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சி தரும் விரிவான பலன்கள் கீழே காணலாம்.
கடக ராசியில் குரு பகவான் உச்ச நிலையில் சஞ்சரிப்பார்.
அக்டோபர் 31, 2026 முதல்:அதிசார கதியில் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
ஜனவரி 25, 2027:வக்ர நிலையில் மீண்டும் கடக ராசிக்கு திரும்புவார்.
இந்த குரு பெயர்ச்சியானது தனுசு ராசியில் பிறந்தவர்களுக்குப் பல வியக்கத்தக்க மற்றும் எதிர்பாராத நிதிநிலை மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குரு பகவான், தற்போது அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு (கடக ராசி) பெயர்ச்சியாகி அங்கு உச்ச பலம் பெறுகிறார். இந்த உச்ச நிலை அக்டோபர் 31, 2026 வரை நீடிக்கும். பொதுவாக அஷ்டம குரு என்றாலே ஆபத்து அல்லது இன்னல்களைத் தரும் என்ற அச்சம் மக்களிடையே உண்டு. ஆனால், தனுசு ராசிக்கு இந்த அஷ்டம குரு பெயர்ச்சி எத்தகைய விசித்திரமான நற்பலன்களைத் தரப்போகிறது என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
ஜோதிட விதிவிலக்கு: "மறைந்த குரு நிறைந்த தனம்!" தனுசு ராசிக்கு குரு பகவான் ராசி நாதனாகவும் (லக்னாதிபதி), நான்காம் வீட்டிற்கு அதிபதியாகவும் விளங்குகிறார். ஒரு சுப கிரகம் கேந்திர வீடுகளுக்கு அதிபதியாக வரும்போது அதற்கு 'கேந்திராதிபத்திய தோஷம்' உண்டாகும். இந்த தோஷம் கொண்ட கிரகம் எட்டாம் வீடான மறைவிடத்தில் மறைந்து, அங்கு உச்சம் பெறுவது தனுசு ராசியினருக்கு தீமைகளை விளைவிக்காது. மாறாக, "மறைந்த குரு நிறைந்த தனம்" என்ற பழமொழிக்கு ஏற்ப, எதிர்பாராத பெரும் யோகங்களையும் சொத்து சேர்க்கையையும் வாரி வழங்கும்.
அர்த்தாஷ்டம சனியின் பாதிப்புகள் குறையும்: தனுசு ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு முதல் அர்த்தாஷ்டம சனி (நான்காம் வீட்டில் சனி சஞ்சாரம்) நடந்து வருகிறது. இதனால் கடந்த ஓராண்டு காலமாக உங்களுக்கு அதிக உடல் சோர்வு, வீண் அலைச்சல்கள், சிறிய அளவிலான ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் எதிர்காலம் பற்றிய ஒருவித அனாவசிய பயமும் மன அழுத்தமும் இருந்திருக்கலாம். தற்போது எட்டாம் இடத்தில் அமரப்போகும் குரு பகவான், தன் ஒன்பதாம் பார்வையால் நான்காம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் சனியையும் நேரடியாகப் பார்க்கிறார். இந்த குரு பார்வையின் காரணமாக கடந்த சில காலமாக நீங்கள் அனுபவித்து வந்த அலைச்சல்களும் உடல் சோர்வுகளும் பெருமளவு குறையும். உடல் ஆரோக்கியம் சீராகி, மனச்சோர்வு மற்றும் தேவையற்ற பதற்றங்கள் விலகி மன அமைதி உண்டாகும். திடீர் நிதிநிலை உயர்வு மற்றும் சொத்து சேர்க்கை ஏற்படும். ஜூன் முதல் அக்டோபர் வரையிலான இந்த ஐந்து மாத காலகட்டம் தனுசு ராசியினருக்கு பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் ஒரு பொற்காலமாகும்.
குரு தன் எட்டாம் இடத்துச் சஞ்சாரத்தின் மூலம் உங்கள் ராசியின் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டை நேரடியாகப் பார்க்கிறார். இதனால் உண்டாகும் சுப பலன்கள்: வராக்கடன்கள் வசூலாகும். நீண்ட நாட்களாக திரும்பி வராது என்று நீங்கள் கைவிட்ட, வாராக்கடன் பட்டியலில் சேர்த்த பணம் இந்த காலகட்டத்தில் உங்களைத் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டப் பணம், பூர்வீக சொத்துகள் மூலம் லாபம், உயில் வழிச் சொத்துகள் மூலம் பெரும் பணம் கைக்கு வரும் வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளன.
ரியல் எஸ்டேட் லாபம்: நீண்ட நாட்களாக விற்க முடியாமல் தவித்த வீடு அல்லது நிலத்தை மிகச் சிறந்த லாபத்திற்கு விற்றுத்தீர்க்கும் சூழ்நிலை அமையும். சாதகமான தசாபுத்தி நடப்பவர்களுக்கு பங்குச்சந்தை (Stock Market) மற்றும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) மூலமும் நல்ல லாபம் கிடைக்கும்.
சொத்து மற்றும் வாகன சேர்க்கை: புதிய வீடு, மனை அல்லது வாகனங்கள் வாங்கும் முயற்சிகள் தடையின்றி கைகூடும். பழைய வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கலாம். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டாளிகளுடன் (Joint Property) இணைந்து பெரிய சொத்துகளில் முதலீடு செய்யும் யோகமும் உண்டாகும். உங்கள் தற்போதைய வீட்டைப் புதுப்பிக்க (Renovation) நினைத்தால், இந்த காலகட்டத்தில் தொடங்கலாம்.
பேச்சால் வருமானம் ஈட்டுபவர்களுக்குப் பொற்காலம்: குருவின் நேரடிப் பார்வை தன ஸ்தானம் மற்றும் வாக்கு ஸ்தானத்தின் மீது விழுவதால், தங்களின் பேச்சாற்றலை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு உச்சகட்ட வளர்ச்சி காலமாகும். ஆசிரியர்கள், ஆலோசகர்கள் (Consultants), பயிற்சியாளர்கள் (Trainers), வழக்கறிஞர்கள் மற்றும் மேடைப் பேச்சாளர்கள் தங்களின் துறையில் மிகப்பெரிய புகழையும் பொருளாதார முன்னேற்றத்தையும் எட்டுவார்கள். உங்கள் சொல்லுக்குச் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து, குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்விப்பீர்கள்.
இந்த பெயர்ச்சி பெரும்பாலான நன்மைகளைத் தந்தாலும், சனியின் பத்தாம் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதாலும், குரு எட்டில் மறைவதாலும் சில எச்சரிக்கைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்:
ரகசியம் காக்கவும்: உங்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்கள், சுப காரியங்கள் அல்லது தொழில் முன்னேற்றங்களைச் சுற்றியுள்ள எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களிடம் மட்டுமே பகிருங்கள். அனாவசியப் பேச்சுகள் கண் திருஷ்டியையும் தடைகளையும் உருவாக்கலாம்.
மறைமுக எதிரிகள்: பணியிடத்தில் உங்களுடனே இருந்து கொண்டு உங்களுக்கு எதிராகச் செயல்படும் மறைமுக எதிரிகள் இருக்க வாய்ப்புண்டு. எனவே, உங்கள் உயர் அதிகாரிகளைப் பற்றியோ அல்லது சக ஊழியர்களைப் பற்றியோ தேவையில்லாத வதந்திகளைப் பேசுவதைத் (Gossip) முற்றிலும் தவிர்க்கவும்.
சுப விரயங்கள்: குருவின் பார்வை 12-ஆம் வீடான விரய ஸ்தானத்தின் மீது விழுவதால், தேவையில்லாத வீண் செலவுகள் குறைந்து, அவை சுப காரியங்களுக்கான செலவுகளாக (திருமணம், சுப நிகழ்ச்சிகள், சொத்து வாங்குதல்) மாறும்.
உங்கள் தனிப்பட்ட ஜாதகப்படி லக்னத்திற்குச் சாதகமற்ற தசாபுத்திகள் (ஆறாம் அதிபதி, அஷ்டமாதிபதி, மாரகாதிபதி அல்லது பாதகாதிபதி திசைகள்) நடந்து கொண்டிருந்தால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாகக் கொலஸ்ட்ரால் (கொழுப்புச் சத்து), உடலில் தோன்றும் கொழுப்புக்கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகள், பித்தப்பை கற்கள் மற்றும் பெருங்குடல் சார்ந்த உபாதைகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைகளைத் தள்ளிப்போடக் கூடாது. முறையான உணவுக் கட்டுப்பாடும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளும் உங்களைப் பாதுகாக்கும்.
சுருக்கமாகக் கூறின், இந்த 2026 குரு பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனியின் பிடியிலிருந்து பெரிய நிவாரணத்தையும், அஷ்டம குருவாக இருந்தாலும் பெரும் பணவரவையும் தந்து வாழ்வை மேம்படுத்தும். ஜோதிட ரீதியாக இப்பெயர்ச்சிக்கு 100-க்கு 75 மதிப்பெண்களை வழங்கலாம்.
பரிகாரம்: இந்த பெயர்ச்சிக் காலத்தில் வரக்கூடிய தடைகள் நீங்கி நற்பலன்கள் அதிகரிக்க, வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வரக்கூடிய சந்திர ஓரையில் (Chandra Hora) சிவபெருமானை மனதார வழிபட்டு வருவது மிகச் சிறந்த நன்மைகளைத் தரும்.